July 2, 2011

நீதான்!!!


தோட்டத்தில் இருக்கும்போது
மதிலுக்குப் பின்னாலிருந்து
வந்து விழும் ஒற்றை
மல்லிகை !

நான் வீட்டில் இருந்தால்
மட்டும் அடிக்கடி வரும்
ஒற்றை தொலைபேசி ஒலி!

அதிகாலை நான்கு மணிக்கு
ஊருக்கு சென்றாலும்
நம் தெருவில் உன் வீட்டில்
மட்டும் எரியும் வாசல்விளக்கு!

அனுப்புவோர் முகவரியும் இல்லாமல்
வார்த்தைகளும் இல்லாமல்
என் பெயருக்கு 
வரும் வெற்று கடிதங்கள்!

என் வீட்டு வார இதழ்களில்
எங்காவது என் பெயர்
தென்பட்டால் அதைச்சுற்றி
இருக்கும் சிகப்பு வட்டம்!

அடிக்கடி காணாமல் போகும்
என் புகைப்படங்கள்!

இதற்க்கெல்லாம் காரணம்
நீதான் என்று அறியவே
எனக்கு நீண்ட நாளானது !

இது மழைக்காலம்!


ஓடிவந்து என் குடை ஒளியும்
அந்த அழகுக்காகவே
மழையையும் நான் காதலிக்கிறேன்!

January 23, 2010

கண்ணீரின் வயது


தலையணையின் ஈரத்தைக்
கேட்டுப்பார் - என்
கண்ணீரின் வயதைச் சொல்லும்!

November 9, 2009

செத்துப்போ என்கிறாய்!

 

உன் விழியம்புகள்
என்னிதயத்தில்
ஏற்படுத்திய காயங்களுக்கு
பேரன்பால் மருந்திட்டு
மேகப்பஞ்சு வைத்து
மின்னல் கட்டு செய்வாயென
வானவில் கனவு  கண்டேன்!

சொல்லம்புகளாலும்
சிதைத்துவிட்டு
செத்துப்போ என்கிறாய்!

பாவம் தேங்கிய நீரும்!



மழை தன் சிறகுகளை
சுருக்கிக்கொண்ட
முன்மாலைப்பொழுது!

சிவப்பேறிய செம்மண்
சாலையில் திட்டுத்திட்டாக
மழைநீர் தேங்கல்கள்!

அவள்
பஞ்சுப்பாதங்களும்
பட்டுப்பாவாடையும்
நனையாதவாறு
தாண்டித் தாண்டி
நடந்து போனாள்!

எனக்குத்தான்
பாவமாக இருந்தது
தேங்கிய நீரை பார்க்க..!

October 29, 2009

கண்டக்டரும் ஐம்பது காசும்..

"கிண்டி ரயில்வே ஸ்டேஷன் எவ்ளோப்பா கேக்கற?"
"100 ரூபா ஆகும் சார்"
"70 ரூபா வாங்கிக்கப்பா. போன வாரம் கூட 70 ரூபாய்க்கு தான் போனேன்."
"90 ரூபா குடு சார் போலாம்."
"80 ரூபானா போலாம்."
"5 ரூபா போட்டுக்குடு சார்."

சத்யம் தியேட்டரில் இருந்து கிண்டிக்கு சென்ற முறை தந்த 70 ரூபாயை விட 15 ரூபாய் அதிகமாய் கொடுத்து என்னால் போக முடிகிறது.

ஆனால் டவுன் பஸ்ஸில் கண்டக்டர் 3.50 போக மீதி 1.50 க்கு பதிலாக 1  ரூபாய் கொடுத்தால் மனது ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

கண்டக்டர்கள் பலவிதம். நூற்றுக்கு தொண்ணூறு  பேர் மீதி சில்லறையை வேண்டா வெறுப்புடனேயே  தருகிறார்கள். பெரும்பாலானோர் மீதி ஐம்பது காசு தருவதே இல்லை. அப்படியே கேட்டலும் ஏதோ ஒரு புழுவை பார்ப்பது போல் பார்க்கின்ற
கண்டக்டர்கள் உண்டு. நாமும் பல சமயங்களில் கேட்பதா வேண்டாமா என்ற மனப்போரட்டத்திற்க்குப் பிறகே கேட்கின்றோம்.

"தரேன்! உன் 50  காசு எடுத்துக்கிட்டு போய் நான் என்ன பங்களாவா கட்டப்போறேன்."

என்று பதில் வரும்.

"நீ பங்களா கட்டு! மச்சினிய கட்டு! எத வேணுன்னாலும் கட்டு! என் காச எனக்கு குடு!"

என்று கேட்க தோன்றும். ஆனால் அப்படி மட்டும் கேட்டுவிட்டால் அவ்வளவுதான். அதற்குப் பிறகு ஒரு அரை மணி நேரம் தம் கட்டி பேசி மானத்தை வாங்கிவிடுவார்.
அப்படி தம் கட்டி பேசியும் கோபம் அடங்கவில்லை என்றால் இன்னொரு 50  காசு மீதி தரவேண்டிய பயணியை அழைத்து ஒரு ரூபாய் வில்லையை கொடுத்து

"ஆளுக்கு ஐம்பது காசு எடுத்துக்கோங்க!"

என்று சிக்கலில் மாட்டி விட்டுவிடுவார். அவர் எங்கு இறங்குவார் என்று தெரியாது.
அப்படியே ஒரு நிறுத்தத்தில் இறங்கினாலும் எங்கு போய் சில்லறை மாற்றுவது.
நாமும் நம்முடைய குக்கரை(பிரஸ்டிஜ்ஜை) விட்டுக் கொடுக்க மனமில்லாமல் "பரவாயில்ல சார்" என்று அவரிடமே கொடுத்துவிடுவோம்.

ஒரு சில சமயம் வீட்டில் சில்லறை சுத்தமாக இருக்காது. 100 ரூபாய் நோட்டாக இருக்கும். பார்த்ததுமே திகில் தொற்றிக்கொள்ளும். "ஆஹா இன்னிக்கி கண்டக்டர்கிட்ட நல்லா பாட்டு வாங்க போறோம்" என்ற நினைப்பே மூட் அவுட் ஆகிவிடும். 100 ரூபாயை பயந்து கொண்டே நீட்டினால் "சேம் பிளட்". இப்பவும் தம் கட்டி அரை மணி நேரம் பாட்டு.

"வர்றவங்க எல்லோரும் 3.50 க்கும் 4.50 க்கும் இப்படி 50 ம் 100 ம் நீட்டினால், நான் போய் கோயில் உண்டியல தான் கொள்ளை அடிக்கணும். பஸ்சுக்கு போறோம்னு தெரியுதில்ல? சில்லையை மாத்திட்டு பஸ் ஏறினா என்ன?"

என்று ஆரம்பிப்பார். அவர் கேட்பது நியாயம் தான் ஆனால் நாமும் வேண்டும் என்றே 100 ரூபாய் கொண்டு வரவில்லை. அவசரத்தில் ஏறினோம் என்று எப்படி விளக்குவது. வேலைக்கு போகிற அவசரத்தில் அவரிடம் சண்டை போட முடியுமா?
ஒரு வழியாக சமாதானம் ஆகி டிக்கெட்டின் பின்னால் 1/100  என்று கிறுக்கி தந்து விடுவார். இறங்கும்போது மறக்காமல் வாங்கினால் உண்டு. இல்லை 100 ரூபாய் அவுட். டவுன் பஸ்ஸில்லாவது பரவாயில்லை. அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஞாபகம் வைத்திருந்து வாங்கிவிடலாம். ஆனால் ஊருக்கு போகும் போது 20  ரூபாய் அல்லது 30 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாய் கொடுத்திருப்போம்.

"சில்லைறை வந்ததும் தரேன்"

என்று சொல்லி விட்டு சென்று விடுவார். நான்கு மணி நேரம் தூக்கம் அவுட். போகும் போதும் வரும் போதும் அவரையே பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.
இடையில் ஏகப்பட்ட கிராமம் நகரம் எல்லாம் வந்து போகும். சில்லறை மட்டும் வராது. பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் புது ஆளுக்கு டிக்கெட் போட வரும் பொது
மனசு சொல்லும்.

"இப்ப கெடச்சிடும் டா. ரெடியா இரு!".

இதயமும் வேகமா துடிக்கும்.கிரிக்கெட் மேட்ச்ல நம்ம டீம் கடைசி பால்ல 3 ரன்
எடுக்க வேண்டி இருந்தா எப்டி திக் திக்னு  இருக்கும். அதே பீலிங். கண்டக்டர் மூஞ்சியையே வேடிக்கை பாத்துகிட்டு இருப்போம். அவரு டிக்கெட் போட்டுட்டு ஒன்னும் சொல்லாம போய்டுவார். இப்படியே ரெண்டு மூணு தடவ நடக்கும்.
ஊரு கிட்ட வந்துடும். டென்ஷன் அதிகமாயிடும். சிலசமயம்

"சில்லறை பாக்கி இருக்கா?"

என்ற குரல் கேட்கும். (இன்ப தேன் வந்து பாயுது காதினிலே). ஒன் பாத்ரூம் ரொம்ப நேரம் அடக்கி வைக்க வேண்டி இருந்து ஒரு நல்ல இடம் வந்தபோது போனா எவ்வளவு நிம்மதி இருக்குமோ அப்படி இருக்கும்.

சரி. திரும்ப ஆரம்பிச்ச எடத்துக்கே வருவோம். ஆட்டோக்கு 15 ரூபாய் அதிகமா தரும்போது வராத கோபம் கண்டக்டர் 50 காசு மீதி தராதபோது வருது. எப்படியாவது வாங்கிடணும்னு நெனக்கிறோம். ஏன்? ஒன்னும் இல்ல "நான் எனக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணிப்பேன்! ஆனா மத்தவங்க என்னை 50 காசு கூட ஏமாத்தக்கூடாது" என்கிற மனோபாவம் தான் அது.

October 13, 2009

பள்ளிக்கூட புளியமரம்

நான் படித்த அரசு பள்ளிக்கூடத்தின் பின்புறம் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் ஒன்று இருந்தது. அனைத்து விளையாட்டுகளுக்கும் இடம் ஒதுக்கி இருப்பார்கள். அந்த பெரிய மைதானத்தின் நடுவில் ஒரு பெரிய புளியமரம் அடர்த்தியாக வளர்ந்திருந்தது.

அந்தந்த விளையாட்டின் எல்லைக்கு உள்ளே சென்றால் விளையாடும் மாணவர்கள்
திட்டுவார்கள் என்பதால் விளையாடாத மாணவர்கள் அந்த மரத்தின் நிழலில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். விளையாடும் மாணவர்களும் அங்கு ஓய்வுக்கு வருவார்கள். அந்த மரத்தின்  வேர்கள்  எல்லா  திசைகளிலும்  நீண்டிருக்கும். எனவே ஒவ்வொரு வேர் பகுதியிலும் மூன்று நான்கு பேராக அமரலாம்.   

நண்பர்களுக்குள் ஏதாவது பேசவேண்டி இருந்தாலோ, விளையாட ஆரம்பிக்கவோ முதலில் அங்குதான் கூடுவோம். புளியமரத்திற்கு வந்துவிடு என்று தகவல் அனுப்பி விட்டால் அங்கே வந்துவிடுவார்கள்.

நாங்கள் மட்டுமல்ல. எங்களுக்கு முன்னால் அந்த பள்ளிக்கூடத்தில் படித்தவர்களும் அப்படித்தான் செய்தார்கள். எங்களுக்கு பின்னால் படித்தவர்களும் அப்படிதான் செய்தார்கள்.விடுமுறை நாட்களில் எங்களை காணவில்லை என்றால் எங்கள் பெற்றோர் தேடி வரும் இடமும் அந்த புளிய மரமே.

இரண்டு ஆள் உயரத்திற்கு பிறகே கிளைகள் பிரியும். கிளைகள் பிரியும் இடத்தில் ஒரு பெரிய பொந்து இருக்கும். எங்களது கிரிக்கெட் மட்டைகள், பந்துகள் அனைத்தையும் அங்கேயே கூட வைத்துவிட்டு வீட்டிற்கு வருவோம். மற்ற மாணவர்கள்  அந்த மட்டையை  எடுத்து விளையாடிவிட்டு  அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

விளையாட்டின்போது மழை வந்துவிட்டால் கூட அந்த மர நிழலிலே ஒதுங்கிவிட்டு மழை நின்றதும் தொடருவோம்.


வகுப்பில் ஆசிரியர் வெளியே அனுப்பினால்கூட புளியமரத்தின் வேர்களில் வந்து அமர்ந்து இருப்போம். அந்த மரம் காய்க்க ஆரம்பித்தால் எங்கள் பாடு கொண்டாட்டம்தான். பிஞ்சு காய்களை கூட விடாமல் பறித்து தின்றுவிடுவோம்.

சொல்லப்போனால் அந்த மரமும் எங்களின் நண்பனே!

அந்த மரத்தின் கிளைகள் ஒடிந்து விழுந்தால்கூட எங்களுக்கு வருத்தமாக இருக்கும். ஒருமுறை புதிதாக வந்த ஒரு தலைமை ஆசிரியர் மைதானத்தின் குறுக்கே தடங்கலாக இருப்பதாக கருதி அந்த மரத்தை வெட்டிவிடலாம் என்று சொன்னார்.விஷயம் காட்டுத்தீ போல பரவி  மாணவர்கள் பலரும் ஆசிரியர்கள் சிலரும் கேட்டுக்கொண்டதற்குப் பிறகு  அவர் வெட்டும் முடிவை மாற்றிக்கொண்டார்.

நாங்களும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லுரி வாழ்கையை ஆரம்பித்தோம். நான் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு ஞாயிற்று கிழமை கல்லுரி இருந்த நகரத்திலிருந்து வீட்டிற்கு வந்திருந்தேன். பக்கத்துக்கு வீட்டு சிறுவன் பள்ளிக்கூட புளியமரம்  எரிவதாக சொல்லிவிட்டு சென்றான். ஒரு புறம் பயமாக இருந்தாலும் பச்சை மரம் எப்படி எரியும் என்று எண்ணியவாறே நானும் பள்ளிக்கூடம் நோக்கி சென்றேன். நாங்கள் பந்துகளை வைக்கும் பொந்தில் யாரோ நெருப்பை வைத்துவிட்டு சென்றிருந்தார்கள்.அது வழியாக மரம் எரிந்து  கொண்டிருந்தது. மனது  கனத்தது. நெஞ்சு அடைத்து அழுகை வந்துவிடும் போல இருந்தது. சிலர் எங்கோ இருந்து தண்ணீர் கொண்டு வந்து அணைக்க முயன்றனர். ஆனால் பலனில்லை. சிறிது நேரத்தில் பார்த்து பலநாள் ஆன நண்பர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் கூட ஆரம்பித்தனர். என் நண்பர்கள் சிலருக்கு கண்கள் கலங்கியிருந்தது. அந்த மரம் இருந்தபோது அதன் அருகிலேயே விளையாடினோம். கூடினோம், பேசினோம்.
அப்போதெல்லாம் அந்த மரத்தினை ஒரு பொருட்டாகவே பார்த்ததில்லை. வீட்டிற்கு வந்து பல மணிநேரம் ஆனபிறகும் அந்த வருத்தம் அப்படியே இருந்தது.

இது எதனால்?
பள்ளிப்பருவத்தில் விளையாடிய மரம் என்பதாலா?
அதனையும் ஒரு நண்பனாக கருதியதாலா?
பழைய ஞாபகங்களை உணர்த்திய ஒரு சாட்சி இன்று இல்லை என்பதாலா?
தெரியவில்லை...

இன்றும் கூட அந்த பக்கம் செல்லும் போது அந்த மரம் இல்லாததை பார்த்து மனம் ஒருகணம் திடுக்கிடும். பிறகு தான் அது எரிந்துபோன ஞாபகம் வரும்...

கொலை காலம்

எதிர்காலத்தைப்பற்றி
கனவு கண்டுகொண்டிருக்கிறேன் - என்
நிகழ்காலம்
இறந்தகாலமாக படுகொலையாவதைக்கூட
கவனிக்காமல் !

ஆக்ரமிப்பு


கண்டிக்கக்கூட
கன நேரம் தராமல்
முழுமையாய் ஆக்ரமித்தாய்!

ஆக்ரமித்துகொள்கிறாய்தானே
என்று அனுமதித்தேன்!
ஆக்ரமித்து கொல்கிறாய்!

பகல்பொழுதை நீ
ஆக்ரமித்துகொள்கிறாய் என்றால்
இரவுப்பொழுதை உன்
உன் நினைவுகள்
ஆக்ரமித்துகொள்கின்றன!

இப்போதெல்லாம் நான்
முழுவதும் உன்
ஆக்ரமிப்பில்!

கோலம்


நீ இரண்டு மணிநேரம்
வரைந்த கோலத்தைவிட
அதைச் சுற்றியுள்ள
உன் காலடித் தடங்களே
எனக்கு அழகாக
தெரிகின்றன!