October 29, 2009

கண்டக்டரும் ஐம்பது காசும்..

"கிண்டி ரயில்வே ஸ்டேஷன் எவ்ளோப்பா கேக்கற?"
"100 ரூபா ஆகும் சார்"
"70 ரூபா வாங்கிக்கப்பா. போன வாரம் கூட 70 ரூபாய்க்கு தான் போனேன்."
"90 ரூபா குடு சார் போலாம்."
"80 ரூபானா போலாம்."
"5 ரூபா போட்டுக்குடு சார்."

சத்யம் தியேட்டரில் இருந்து கிண்டிக்கு சென்ற முறை தந்த 70 ரூபாயை விட 15 ரூபாய் அதிகமாய் கொடுத்து என்னால் போக முடிகிறது.

ஆனால் டவுன் பஸ்ஸில் கண்டக்டர் 3.50 போக மீதி 1.50 க்கு பதிலாக 1  ரூபாய் கொடுத்தால் மனது ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

கண்டக்டர்கள் பலவிதம். நூற்றுக்கு தொண்ணூறு  பேர் மீதி சில்லறையை வேண்டா வெறுப்புடனேயே  தருகிறார்கள். பெரும்பாலானோர் மீதி ஐம்பது காசு தருவதே இல்லை. அப்படியே கேட்டலும் ஏதோ ஒரு புழுவை பார்ப்பது போல் பார்க்கின்ற
கண்டக்டர்கள் உண்டு. நாமும் பல சமயங்களில் கேட்பதா வேண்டாமா என்ற மனப்போரட்டத்திற்க்குப் பிறகே கேட்கின்றோம்.

"தரேன்! உன் 50  காசு எடுத்துக்கிட்டு போய் நான் என்ன பங்களாவா கட்டப்போறேன்."

என்று பதில் வரும்.

"நீ பங்களா கட்டு! மச்சினிய கட்டு! எத வேணுன்னாலும் கட்டு! என் காச எனக்கு குடு!"

என்று கேட்க தோன்றும். ஆனால் அப்படி மட்டும் கேட்டுவிட்டால் அவ்வளவுதான். அதற்குப் பிறகு ஒரு அரை மணி நேரம் தம் கட்டி பேசி மானத்தை வாங்கிவிடுவார்.
அப்படி தம் கட்டி பேசியும் கோபம் அடங்கவில்லை என்றால் இன்னொரு 50  காசு மீதி தரவேண்டிய பயணியை அழைத்து ஒரு ரூபாய் வில்லையை கொடுத்து

"ஆளுக்கு ஐம்பது காசு எடுத்துக்கோங்க!"

என்று சிக்கலில் மாட்டி விட்டுவிடுவார். அவர் எங்கு இறங்குவார் என்று தெரியாது.
அப்படியே ஒரு நிறுத்தத்தில் இறங்கினாலும் எங்கு போய் சில்லறை மாற்றுவது.
நாமும் நம்முடைய குக்கரை(பிரஸ்டிஜ்ஜை) விட்டுக் கொடுக்க மனமில்லாமல் "பரவாயில்ல சார்" என்று அவரிடமே கொடுத்துவிடுவோம்.

ஒரு சில சமயம் வீட்டில் சில்லறை சுத்தமாக இருக்காது. 100 ரூபாய் நோட்டாக இருக்கும். பார்த்ததுமே திகில் தொற்றிக்கொள்ளும். "ஆஹா இன்னிக்கி கண்டக்டர்கிட்ட நல்லா பாட்டு வாங்க போறோம்" என்ற நினைப்பே மூட் அவுட் ஆகிவிடும். 100 ரூபாயை பயந்து கொண்டே நீட்டினால் "சேம் பிளட்". இப்பவும் தம் கட்டி அரை மணி நேரம் பாட்டு.

"வர்றவங்க எல்லோரும் 3.50 க்கும் 4.50 க்கும் இப்படி 50 ம் 100 ம் நீட்டினால், நான் போய் கோயில் உண்டியல தான் கொள்ளை அடிக்கணும். பஸ்சுக்கு போறோம்னு தெரியுதில்ல? சில்லையை மாத்திட்டு பஸ் ஏறினா என்ன?"

என்று ஆரம்பிப்பார். அவர் கேட்பது நியாயம் தான் ஆனால் நாமும் வேண்டும் என்றே 100 ரூபாய் கொண்டு வரவில்லை. அவசரத்தில் ஏறினோம் என்று எப்படி விளக்குவது. வேலைக்கு போகிற அவசரத்தில் அவரிடம் சண்டை போட முடியுமா?
ஒரு வழியாக சமாதானம் ஆகி டிக்கெட்டின் பின்னால் 1/100  என்று கிறுக்கி தந்து விடுவார். இறங்கும்போது மறக்காமல் வாங்கினால் உண்டு. இல்லை 100 ரூபாய் அவுட். டவுன் பஸ்ஸில்லாவது பரவாயில்லை. அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஞாபகம் வைத்திருந்து வாங்கிவிடலாம். ஆனால் ஊருக்கு போகும் போது 20  ரூபாய் அல்லது 30 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாய் கொடுத்திருப்போம்.

"சில்லைறை வந்ததும் தரேன்"

என்று சொல்லி விட்டு சென்று விடுவார். நான்கு மணி நேரம் தூக்கம் அவுட். போகும் போதும் வரும் போதும் அவரையே பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.
இடையில் ஏகப்பட்ட கிராமம் நகரம் எல்லாம் வந்து போகும். சில்லறை மட்டும் வராது. பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் புது ஆளுக்கு டிக்கெட் போட வரும் பொது
மனசு சொல்லும்.

"இப்ப கெடச்சிடும் டா. ரெடியா இரு!".

இதயமும் வேகமா துடிக்கும்.கிரிக்கெட் மேட்ச்ல நம்ம டீம் கடைசி பால்ல 3 ரன்
எடுக்க வேண்டி இருந்தா எப்டி திக் திக்னு  இருக்கும். அதே பீலிங். கண்டக்டர் மூஞ்சியையே வேடிக்கை பாத்துகிட்டு இருப்போம். அவரு டிக்கெட் போட்டுட்டு ஒன்னும் சொல்லாம போய்டுவார். இப்படியே ரெண்டு மூணு தடவ நடக்கும்.
ஊரு கிட்ட வந்துடும். டென்ஷன் அதிகமாயிடும். சிலசமயம்

"சில்லறை பாக்கி இருக்கா?"

என்ற குரல் கேட்கும். (இன்ப தேன் வந்து பாயுது காதினிலே). ஒன் பாத்ரூம் ரொம்ப நேரம் அடக்கி வைக்க வேண்டி இருந்து ஒரு நல்ல இடம் வந்தபோது போனா எவ்வளவு நிம்மதி இருக்குமோ அப்படி இருக்கும்.

சரி. திரும்ப ஆரம்பிச்ச எடத்துக்கே வருவோம். ஆட்டோக்கு 15 ரூபாய் அதிகமா தரும்போது வராத கோபம் கண்டக்டர் 50 காசு மீதி தராதபோது வருது. எப்படியாவது வாங்கிடணும்னு நெனக்கிறோம். ஏன்? ஒன்னும் இல்ல "நான் எனக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணிப்பேன்! ஆனா மத்தவங்க என்னை 50 காசு கூட ஏமாத்தக்கூடாது" என்கிற மனோபாவம் தான் அது.

No comments:

Post a Comment