October 13, 2009

பள்ளிக்கூட புளியமரம்

நான் படித்த அரசு பள்ளிக்கூடத்தின் பின்புறம் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் ஒன்று இருந்தது. அனைத்து விளையாட்டுகளுக்கும் இடம் ஒதுக்கி இருப்பார்கள். அந்த பெரிய மைதானத்தின் நடுவில் ஒரு பெரிய புளியமரம் அடர்த்தியாக வளர்ந்திருந்தது.

அந்தந்த விளையாட்டின் எல்லைக்கு உள்ளே சென்றால் விளையாடும் மாணவர்கள்
திட்டுவார்கள் என்பதால் விளையாடாத மாணவர்கள் அந்த மரத்தின் நிழலில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். விளையாடும் மாணவர்களும் அங்கு ஓய்வுக்கு வருவார்கள். அந்த மரத்தின்  வேர்கள்  எல்லா  திசைகளிலும்  நீண்டிருக்கும். எனவே ஒவ்வொரு வேர் பகுதியிலும் மூன்று நான்கு பேராக அமரலாம்.   

நண்பர்களுக்குள் ஏதாவது பேசவேண்டி இருந்தாலோ, விளையாட ஆரம்பிக்கவோ முதலில் அங்குதான் கூடுவோம். புளியமரத்திற்கு வந்துவிடு என்று தகவல் அனுப்பி விட்டால் அங்கே வந்துவிடுவார்கள்.

நாங்கள் மட்டுமல்ல. எங்களுக்கு முன்னால் அந்த பள்ளிக்கூடத்தில் படித்தவர்களும் அப்படித்தான் செய்தார்கள். எங்களுக்கு பின்னால் படித்தவர்களும் அப்படிதான் செய்தார்கள்.விடுமுறை நாட்களில் எங்களை காணவில்லை என்றால் எங்கள் பெற்றோர் தேடி வரும் இடமும் அந்த புளிய மரமே.

இரண்டு ஆள் உயரத்திற்கு பிறகே கிளைகள் பிரியும். கிளைகள் பிரியும் இடத்தில் ஒரு பெரிய பொந்து இருக்கும். எங்களது கிரிக்கெட் மட்டைகள், பந்துகள் அனைத்தையும் அங்கேயே கூட வைத்துவிட்டு வீட்டிற்கு வருவோம். மற்ற மாணவர்கள்  அந்த மட்டையை  எடுத்து விளையாடிவிட்டு  அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

விளையாட்டின்போது மழை வந்துவிட்டால் கூட அந்த மர நிழலிலே ஒதுங்கிவிட்டு மழை நின்றதும் தொடருவோம்.


வகுப்பில் ஆசிரியர் வெளியே அனுப்பினால்கூட புளியமரத்தின் வேர்களில் வந்து அமர்ந்து இருப்போம். அந்த மரம் காய்க்க ஆரம்பித்தால் எங்கள் பாடு கொண்டாட்டம்தான். பிஞ்சு காய்களை கூட விடாமல் பறித்து தின்றுவிடுவோம்.

சொல்லப்போனால் அந்த மரமும் எங்களின் நண்பனே!

அந்த மரத்தின் கிளைகள் ஒடிந்து விழுந்தால்கூட எங்களுக்கு வருத்தமாக இருக்கும். ஒருமுறை புதிதாக வந்த ஒரு தலைமை ஆசிரியர் மைதானத்தின் குறுக்கே தடங்கலாக இருப்பதாக கருதி அந்த மரத்தை வெட்டிவிடலாம் என்று சொன்னார்.விஷயம் காட்டுத்தீ போல பரவி  மாணவர்கள் பலரும் ஆசிரியர்கள் சிலரும் கேட்டுக்கொண்டதற்குப் பிறகு  அவர் வெட்டும் முடிவை மாற்றிக்கொண்டார்.

நாங்களும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லுரி வாழ்கையை ஆரம்பித்தோம். நான் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு ஞாயிற்று கிழமை கல்லுரி இருந்த நகரத்திலிருந்து வீட்டிற்கு வந்திருந்தேன். பக்கத்துக்கு வீட்டு சிறுவன் பள்ளிக்கூட புளியமரம்  எரிவதாக சொல்லிவிட்டு சென்றான். ஒரு புறம் பயமாக இருந்தாலும் பச்சை மரம் எப்படி எரியும் என்று எண்ணியவாறே நானும் பள்ளிக்கூடம் நோக்கி சென்றேன். நாங்கள் பந்துகளை வைக்கும் பொந்தில் யாரோ நெருப்பை வைத்துவிட்டு சென்றிருந்தார்கள்.அது வழியாக மரம் எரிந்து  கொண்டிருந்தது. மனது  கனத்தது. நெஞ்சு அடைத்து அழுகை வந்துவிடும் போல இருந்தது. சிலர் எங்கோ இருந்து தண்ணீர் கொண்டு வந்து அணைக்க முயன்றனர். ஆனால் பலனில்லை. சிறிது நேரத்தில் பார்த்து பலநாள் ஆன நண்பர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் கூட ஆரம்பித்தனர். என் நண்பர்கள் சிலருக்கு கண்கள் கலங்கியிருந்தது. அந்த மரம் இருந்தபோது அதன் அருகிலேயே விளையாடினோம். கூடினோம், பேசினோம்.
அப்போதெல்லாம் அந்த மரத்தினை ஒரு பொருட்டாகவே பார்த்ததில்லை. வீட்டிற்கு வந்து பல மணிநேரம் ஆனபிறகும் அந்த வருத்தம் அப்படியே இருந்தது.

இது எதனால்?
பள்ளிப்பருவத்தில் விளையாடிய மரம் என்பதாலா?
அதனையும் ஒரு நண்பனாக கருதியதாலா?
பழைய ஞாபகங்களை உணர்த்திய ஒரு சாட்சி இன்று இல்லை என்பதாலா?
தெரியவில்லை...

இன்றும் கூட அந்த பக்கம் செல்லும் போது அந்த மரம் இல்லாததை பார்த்து மனம் ஒருகணம் திடுக்கிடும். பிறகு தான் அது எரிந்துபோன ஞாபகம் வரும்...

2 comments:

  1. சிறு வயதில் எங்கள் பள்ளியின் பின்னாலும் புளிய மரங்கள் இருந்தன அதில் குரங்குகள் போல திரிந்த காலத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். நன்றி பல்லவ நாடன். வந்தியத்தேவன் படம் அருமை??

    ReplyDelete
  2. //வந்தியத்தேவன் படம் அருமை??//

    திரு kailashi,

    வந்தியத்தேவன் என்று சரியாக சொன்னிர்கள்! ஆச்சர்யமாக இருந்தது!

    ReplyDelete